மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் |
36. திருப்பாண்டிப் பதிகம் |
திருப்பெருந்துறையில் அருளியது |
சிவானந்த விளைவு |
கட்டளைக் கலித்துறை |
பருவரை மங்கைதன் பங்கரைப்
பாண்டியற் காரமுதாம்
ஒருவரை ஒன்று மிலாதவரைக்
கழற்போ திறைஞ்சித்
தெரிவர நின்றுருக் கிப்பரி
மேற்கொண்ட சேவகனார்
ஒருவரை யன்றி உருவறி
யாதென்றன் உள்ளமதே. |
1 |
சதுரை மறந்தறி மால்கொள்வர்
சார்ந்தவர் சாற்றிச்சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி
கழுக்கடை கைப்பிடித்துக்
குதிரையின் மேல்வந்து கூடிடு
மேற்குடி கேடுகண்டீர்
மதுரையர் மன்னன் மறுபிறப்
போட மறித்திடுமே. |
2 |
நீரின்ப வெள்ளத்துள் நீந்திக்
குளிக்கின்ற நெஞ்சங்கொண்டீர்
பாரின்ப வெள்ளங் கொளப்பரி
மேற்கொண்ட பாண்டியனார்
ஓரின்ப வெள்ளத் துருக்கொண்டு
தொண்டரை உள்ளங்கொண்டார்
பேரின்ப வெள்ளத்துட் பெய்கழ
லேசென்று பேணுமினே. |
3 |
செறியும் பிறவிக்கு நல்லவர்
செல்லன்மின் தென்னன்நன்னாட்
டிறைவன் கிளர்கின்ற காலமிக்
காலம்எக் காலத்துள்ளும்
அறிவொண் கதிர்வாள் உறைகழித்
தானந்த மாக்கடவி
எறியும் பிறப்பை எதிர்ந்தார்
புரள இருநிலத்தே. |
4 |
காலமுண் டாகவே காதல்செய்
துய்ம்மின் கருதரிய
ஞாலமுண் டானொடு நான்முகன்
வானவர் நண்ணரிய
ஆலமுண் டான்எங்கள் பாண்டிப்
பிரான்தன் அடியவர்க்கு
மூலபண் டாரம் வழங்குகின்
றான்வந்து முந்துமினே. |
5 |
ஈண்டிய மாயா இருள்கெட
எப்பொரு ளும்விளங்கத்
தூண்டிய சோதியை மீனவ
னுஞ்சொல்ல வல்லன்அல்லன்
வேண்டிய போதே விலக்கிலை
வாய்தல் விரும்புமின்தாள்
பாண்டிய னாரருள் செய்கின்ற
முத்திப் பரிசிதுவே. |
6 |
மாயவ னப்பரி மேல்கொண்டு
மற்றவர் கைக்கொளலும்
போயறும் இப்பிறப் பென்னும்
பகைகள் புகுந்தவருக்கு
ஆய அரும்பெருஞ் சீருடைத்
தன்னரு ளேஅருளுஞ்
சேய நெடுங்கொடைத் தென்னவன்
சேவடி சேர்மின்களே. |
7 |
அழிவின்றி நின்றதோர் ஆனந்த
வெள்ளத் திடையழுத்திக்
கழிவில் கருணையைக் காட்டிக்
கடிய வினையகற்றிப்
பழமலம் பற்றறுத் தாண்டவன்
பாண்டிப் பெரும்பதமே
முழுதுல குந்தரு வான்கொடை
யேசென்று முந்துமினே. |
8 |
விரவிய தீவினை மேலைப்
பிறப்புமுந் நீர்கடக்கப்
பரவிய அன்பரை என்புருக்
கும்பரம் பாண்டியனார்
புரவியின் மேல்வரப் புந்திகொ
ளப்பட்ட பூங்கொடியார்
மரவியன் மேல்கொண்டு தம்மையுந்
தாம்அறி யார்மறந்தே. |
9 |
கூற்றைவென் றாங்கைவர் கோக்களை
யும்வென் றிருந்தழகால்
வீற்றிருந் தான்பெருந் தேவியுந்
தானும்ஓர் மீனவன்பால்
ஏற்றுவந் தாருயி ருண்ட
திறலொற்றைச் சேவகனே
தேற்றமி லாதவர் சேவடி
சிக்கெனச் சேர்மின்களே. |
10 |
திருச்சிற்றம்பலம் |